21 Apr 2010

புரியாத புதிர்தான்!















பல நாளாய்
எழுதுகிறேன்தான்!

ஆனால்
நானொன்றும்
எழுத்தாளன் கிடையாது!

இங்கு
எழுதி எழுதி
எதையும் சாதிக்கும் எண்ணம்
எப்போதும் எனக்கில்லை!

ம்...!
சத்தமின்றி யுத்தம் செய்யும்
என் மனது
எதை எதையோ
சொல்லிவிடத் துடிக்கிறது!

கேட்பதற்கு யாருள்ளார்…?
என்ற
கேள்விக் குறி இங்கே!

என் மனது
சொல்லத் துடிப்பவற்றை
என் விரல்கள்
எழுதி முடிக்கிறது!

சத்தம் போட்டு
யுத்தம் செய்ய
சத்தியமாய் விருப்பமில்லை!

ஆகவே…
சத்தங்கள் எதுவுமின்றி
இங்கு நிசப்தமாய்!

ஓ...!
உன்னை
புரிந்து கொள்ள முடியவில்லை
புரியாத புதிர் என்றாய்!

ம்…!
புரியாத புதிர்தான்!

ஒன்று சொல்லட்டுமா…?

பெற்றவர் கூட
இற்றைவரை எனை புரிந்ததில்லை!

ஓ...!
இன்னுமொன்று சொல்லட்டுமா…?

கூடப் பிறந்து
ஓடித் திரிந்து
ஒற்றுமையாய் இருந்து
ஒரு தட்டில் உண்டு
ஒன்றாய் உறங்கிய
என் உடன் பிறப்புகள் கூட
ஒருவரும் புரிந்ததில்லை!

நீ
எங்கே இருந்து
எப்படிப் புரிவாய்…?

ம்…!
நீ
என் அகத்தை
எப்படிப் புரிவாய்…?

புரியாத புதிராய்
புரியாமலே இருக்கட்டும்!
இனியும்
புரிந்து கொள்ளத் துடிக்காதே!

ம்…!
இன்று போலவே
என்றும் - நீ
வாசகனாய் இருந்து விடு!


-சத்தியா

No comments: