

இன்னும் இளமையாகவே
இருக்கிறது - நீ
வாழ்ந்து கொண்டிருக்கும்
உன்னைப்பற்றிய என் கவிதைகள்
அழகான இக் கவிதைகளுக்கு பின்
அழுது வழிந்து சிவந்த
இருவிழிகள் இருப்பது என்னைத்
தவிர்த்து இங்கு எவருக்குமே தெரியாது
காண்பவர் கண்களுக்கு இது
வெறும் கவிதை என்றாலும்
உன்னைப்பற்றிய வேதனைகளும்
வாழ்வைப்பற்றிய வெறுப்புக்களையும்
நான் தாண்டிக் கொள்வது
இந்த கவிதைகள் மூலம் தான்
உள்ளமாய் இருந்தவன்
உதறிவிட்டுப் போனான்
என்பதை.. ஊருக்குள்
சொல்லாமல்
மனதுக்குள் வைத்து
மௌனித்திருப்பது - உன்னை
மறந்தமைக்கான முடிவல்ல
முகங்கொடுக்கமுடியாத மனவேதனைக்கானது
என்பதால் தான்.!
ஓய்ந்து போன என் உயிர்
வாழ்தலில் எனக்கும்
ஓர் உற்சாகமிருக்கும் - மனமோ
இந்த மனிதர்களோ
உன்னைக் கேட்காத உலகில்
என்னால் உயிர்வாழ முடியுமென்றால்...!
ப்ரியமானவனே..!
என் சுதந்திரமான செயற்பாட்டிற்கு
வேலியாய் போன உன்
ஞாபகங்கள் நிறைந்த
இந்த நெஞ்சில்
மரணத்தை பற்றியும்
மறைத்துக் கொள்ள முடியாத
ஒரு பயம் பரவிக்கொண்டிருக்கிறது...
மரணித்து நான் மறுபடியும் பிறந்து
பிறந்ததுமே உன் பெயரைச் சொல்லி
அழுது விடுவேனோ என்று..
-சங்கர்
No comments:
Post a Comment