18 Apr 2010

காதல் தேர்தல்..












தெளிவாய் தெரிகிறது
நம் காதல் தேர்தலுக்கு
பெற்றோர்
வாக்களிக்க மாட்டார்கள்
புறக்கணிப்புச் செய்வார்கள்..

நிறைவேற்று அதிகாரத்துடன்
நீயும் நானும்
இயங்குவது தவிர
இங்கு வேறு வழியேது

உதிரிக்கட்சிகள் போல்
ஊரார் சிலர் எம்மோடு
கூட்டுச்சேர்ந்தாலும்
வலுமிக்க எதிர்க்கட்சிகளாய்..
நிலைத்திருக்கின்றனர் நம் பெற்றோர்.
காலமின்னும் கடந்தால்
செல்லாத வாக்கு போல்
சென்றுவிடும் நம் நிலமை..

எத்தனை வாக்குறுதியை
நானளித்த போதும்
ஏற்கிறார்கள் இல்லை.

காணாமல் போனது
காதல் ஜனநாயகம்
கண்டிப்பு எனும் சாட்டில்
பெற்றோரின் சர்வதிகாரம்..

எம் காதலை
எத்தனை கீழ்தரமாய்
பிரச்சாரம் செய்கின்றனர்
உன் மாமன்

நாம் செய்திட்ட இரகசிய
சந்திப்புக்கள்
நமக்கு எதிராய்
நாமே ஒட்டும் சுவரொட்டிகளாய்
ஆகிற்றே..

கடித பரிமாற்றத்தை
கச்சிதமாக செய்து தந்த
உன் பாசத் தம்பி
கட்சி மாறி
காட்;டி கொடுத்து விட்;டானே

எம்மை எதிர்ப்போரை
நிராகரிக்கப்பட்ட
வாக்குகளாக்கி
நிச்சயம் வெல்வோம்
இது
அடிக்கடி இடம்பெறும்
ஆட்சிக்கான தேர்தல்
அல்ல..
ஆயுளின் ஒருமுறையே வரும்
காதல் தேர்தல்...


யோ. புரட்சி

No comments: