26 Jan 2010



அழகிய நந்தவனத்தில்
அநாதையான பறவை நான்
சிறகுகள் எனக்கிருந்தும்
சிறகடிக்க தெரியாது தவித்தேன்
வானத்தில் பறக்க ஆசை வந்தும்
தனிமையில் பறக்க வெறுத்தேன்..!!

பறக்கும் பறவைகளை கண்டு
பலநாட்கள் ஏங்கினேன்.
என் ஏக்கம் அறிந்து ஒரு பறவை
என்னிடம் பதுங்கி பதுங்கி வந்தது..

எனக்கு பறவை மொழி கற்று தந்தது
நானும் கற்றேன் மொழியை...
மறந்தேன் என் தாய் மொழியை

இறக்கைவிரித்து பறந்தேன்
வானத்தில் பறந்த போது
என் கண்களுக்கு தெரிந்த எல்லாமே
சின்னதாகவே இருந்தன..

நிஜத்தை தொலைத்தேன்
நிழலாக பறந்தேன் வானத்தில்..
நிஜம் எது நிழல் எது என
குழம்பினேன் நானும்..

நந்தவனத்தில் இருந்த இனிமை
எனக்கு கிடைக்கவில்லை வானில்
நிஜத்தை தொலைத்த போது
நிழல்களும் என்னை விட்டு நீங்கின..!!

வானில் என்னோடு பறந்த
பறவையும் தன்னிருப்பிடம்
சென்றுவிட..

நானோ மீண்டும் அநாதையாகி
மொழி தெரிந்து மெளனி ஆனேன்
எங்கே செல்வது என்று தெரியாது
அந்தரத்தில் பறந்தபடி யோசித்தேன்..

அந்த பரந்த வானில் இன்னோர்
அழகிய பறவை சிறகடித்து
பறந்து வந்து தவித்த என்னிடம்
நிஜத்தை கற்பித்தது அன்பாக..

இன்று நான் அப்பறவையுடன்
என் அழகிய நந்தவனத்தில்
நிஜத்துடன் வாழ்கிறேன்
நிழலாக வாழாமல்..!

No comments: