
ஒன்றுமே நடக்காதது போலவும்
ஏதுமே அறியாதவள் போலவும்
இப்போதைக்கான
உன்னுடைய பாவனைகள்
நீயா இவ்வளவும்
சப்பி மென்று துப்பி விட்டு
பேய்ப்பெயர் எடுத்துவிட்டு
பெரும் அமைதி காக்கின்றாய்
சுடச்சுடவே மீன் குழம்பு
ருசிப்பதற்கென்று நாங்கள்
சுடச்சுடவே கடலேறிப்
போகையிலும் நீதானே
அலைக்கரம் கொண்டெம்மை
அரவணைத்தாய் அக்கரமேன்
கொலைக்கரமாய் மாறிப்போயிற்று..?
நீ வந்து போன கரை
நெடுகிலும் பார் எல்லாமே
கழிவொயில் கொட்டியதாய்
கறுத்துப்போய்க் கிடக்கிறது
கரையோரத்தாவரங்கள் கூட
தாங்காமல்
எரிஞ்சது போல் கருகி
இறந்துளது என் செய்தாய்..?
வல்லரசுக் கழிவுகளை
வாரி இறைப்பதற்கு
எம் கரைதான் உனக்கு
இடமாச்சோ..? ஈழப்போர்
இருபத்தைந்தாண்டுகளாய்
கொடுத்த உயிர்த்தொகையை
இரு்பதே செக்கன்
இரைச்சலுக்குள் வென்றாயே..!
நானும் உள்ளேன்
நாவடக்கம் கொள்ளுக நீர்
என்றுரத்துரைத்திடவா
இப்படி நீ தலை விரித்தாய்..?
நீ இல்லாத
எம் வாழ்வுச் செழிப்பும்
நாமில்லாத
உன் வளங்களின் அர்த்தமும்
சாத்தியமற்றது தாயே..!
ஆதலால் உன் மீது மீண்டும்
ஊன்றி வலம் வருவோம்
ஆனாலும்
ஒன்றுதான் எனக்கு கவலை
வலியோர்கள்
உன் மீது திணித்த அணுச்சூட்டை
அப்படியே அவர் மீதே
கொட்டி அடக்காமல்
தடுமாறி,
உலக வழக்கொத்து
உன்னுடைய வீரியத்தை
மெலியோரில்
தவிச்சமுயல் அடித்துவிட்டாய்
போ தாயே..
வரவரத்தான் நீயுமிப்ப
மனுசரைப்போல்
மாறி விட்டாய்.
தி.திருக்குமரன்
No comments:
Post a Comment