4 Jan 2010

இனிதே நிறைவுறட்டும்.. (Wednesday, October 21, 2009 at 8:17pm)

இத்தோடு என் வாழ்வு
இனிதே நிறைவுறட்டும்
பத்தோடு பதினொன்றாய் ஆகி
பலர் பார்வை
பரிதாபமாய் என்னைப்பார்த்து
அடபாவம்..!
’செத்தே இவன் வாழ்ந்து செத்தான்’
எனச்சொல்லும்
சிதழூறும் வார்த்தைகளைக்
கேட்பதற்குள் ஆண்டவனே!
இத்தோடென் வாழ்வு
இனிதே நிறைவுறட்டும்,

பட்டுப்பட்டு மனம்
பக்குவம் தான் பட்டாலும்
வெட்டுப்பட்ட தடம்
வெறுங்கோடாய்ப்போனாலும்
‘கட்டை விரல் சிதைந்தவலி
காலெடுத்தும் இருப்பது போல்
அறுத்தெறிந்த பல்லி
வால் கிடந்து துடிப்பதுபோல்’
சுட்ட நினைவலைகள்
சூடேறி மன என்பின்
மச்சை கொதித்துருகி
வெடித்தொழுகவைக்கிறது,

அதிக கொதி நிலையில்
அளவற்ற மனச்சுமையில்
இதயம் இயலாமற் பொசுங்கி
மற்றவர்கள்
ஆவியாய் நான்
ஆகிப்போவதனைக் கண்ணுற்று
தேவையா? எனச்சொல்லித்
தெருவெல்லாம் வடிப்பதனை
பாவியேன் பார்த்தழுந்த
வேண்டுமோ..? நல்லூரா!

இருக்கின்ற நிமிர்வோடும்
எதைக்கண்டும் கலங்காத
தருக்கன் எனும் கலகப்பேரோடும்
அன்புக்கு
உருகித்தலை சாய்ந்துயிர்
கொடுப்பான் என்கின்ற
இன்பப்பொழுதொன்றின்
இதத்தோடும் தடத்தோடும்
இத்தோடென் வாழ்வு
இனிதே நிறைவுறட்டும்.

தி.திருக்குமரன்

No comments: